இந்திய அரசின் 2007க்கான தேசிய சினிமா விருதுகளை அறிவித்திருக்கிறீர்கள். எல்லா விருதுகளும் எப்போதும் சர்ச்சைக்குரியவைதான். பிரகாஷ் ராஜ் ஒரு திறமையான நடிகர் என்பதில் மாறுபட்ட கருத்து இல்லை. விருதுகள் பெறுவதற்கான தகுதி உடையவர்தான் அவர். ஆனால் வருட அடிப்படையில் விருது தரும்போது அந்த வருடம் வந்த படங்களில் சிறந்த படம், அவற்றில் இருந்த நடிகர்களில் சிறந்த நடிகர் என்பதுதான் அடிப்படையாக இருக்க வேண்டும் அல்லவா ?
அப்படிப் பார்த்தால் காஞ்சிவரம் படமும் சரி, பிரகாஷ்ராஜும் சரி, சிறந்த படம், சிறந்த நடிகர் விருதுகளுக்குரியவர்களாக ஒரு ரசிகன் என்ற முறையில் எனக்கு உடன்பாடில்லை. காஞ்சிவரம் படம் ஒரு செயற்கையான படம். தொழில்நுட்ப நேர்த்தியால் செயற்கையான கதையை மறைக்கிற பாவனைப் படம். நேர்த்தி இருக்கிறது. ஆன்மா இல்லை.
நியாயப்படி சிறந்த படம் விருது ‘தாரே சமீன் பர்’ படத்துக்குத்தான் தரப்பட்டிருக்க வேண்டும். கற்றல் குறைபாடுள்ள சிறுவனின் வாழ்க்கையைப் பற்றி நேர்மையோடும் அக்கறையோடும் எடுக்கப்பட்ட படம் அது என்பது படம் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் தெரியும். அதே போல சிறந்த நடிகர் விருது தாரே சமீன் பர் படத்தில் நடித்த சிறுவனான தர்ஷீல் சஃபாரிக்குத்தான் தரப்படவேண்டும். சிறந்த நடிகர் விருதை குழந்தைகளுக்குத் தரக்கூடாது என்று விதி இருக்கிறதா என்ன ?
தாரே சமீன் பர் படம் பிலிம்பேர் பத்திரிகையின் விருதுகளுக்கு நியமனத் தேர்வான சமயத்தில் தர்ஷீல் தன்னை குழந்தை நடிகர் பிரிவில் பரிசீலிப்பதற்கு சம்மதிக்கவில்லை. அந்தப்படத்தின் கதாநாயகன் தான்தான் என்ற முறையில் சிறந்த நடிகர் பிரிவிலேயே தன்னை பரிசீலிக்க வேண்டும் என்பது தர்ஷீலீன் நியாயமான வாதம்.
தாரே சமீன் பர் படத்துக்குச் சிறந்த குடும்ப நலப்படம் என்ற பிரிவில் விருதளித்திருப்பது கொடுமை.
மாநில அளவில் சிறந்த படம் என்று தமிழில் ‘பெரியார்’ படத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறீர்களே, இது சுத்தமான அரசியல். பெரியாரை கவுரவிப்பதற்கான வழி இதுவல்ல. பெரியாரை சரியாக சித்திரிக்கத் தவறிய படம் அது. 2007ல் தமிழில் வந்த படங்களில், பெரியாரை விட சிறந்த படங்கள் என்று, மொழி, ஒன்பது ரூபாய் நோட்டு, எவனோ ஒருவன், பருத்தி வீரன், பள்ளிக் கூடம் என்று குறைந்தது ஐந்து படங்களைப் பட்டியலிடமுடியும்.
சாகித்ய அகாதமி முதல் சினிமா விருதுகள் வரை டெல்லியிலிருந்து வரும் எந்த விருதும், லாபியிங்கெல்லாம் இல்லாமல் நேர்மையாக மொழி, வட்டாரம் கடந்து தேர்வு செய்வது எப்போது நடக்கும் ?
நன்றி : ஞானி.net
No comments:
Post a Comment