Tuesday, August 18, 2009

வள்ளுவருக்கு மரியாதை!

இரண்டு வரிகளில் உலகை அளந்த வள்ளுவருக்கு உள்நாட்டில் 18 ஆண்டுகாலச் சிறைவாசம். 1991ம் ஆண்டு செப்டம்பர் மாதம், பெங்களூரு தமிழ்ச் சங்கத்தால் அல்சூர் ஏரிக் கரையில் அமைக்கப்பட்ட திருவள்ளுவர் சிலையை அப்போதைய கர்நாடக முதல்வர் பங்காரப்பா திறப்பதாக உறுதி அளித்தார். ஆனால் கன்னட புலிகேசி சங்கம் என்ற அமைப்பு திருவள்ளுவர் சிலையைத் திறக்கக்கூடாது என்று வழக்குப் போட்டது. நடிகர் ராஜகுமாரைக் கடத்தியபோது இதையும் தனது கோரிக்கையாக வைத்தான் சந்தன வீரப்பன். ராஜ்குமார் காட்டில் இருந்தபோது ஒப்புக் கொண்ட கன்னட அமைப்புகள், பின்னர் அவர் விடுவிக்கப்பட்டவுடன் அதைக் கைவிட்டன. காவிரிப் பிரச்னை ஒகேனக்கல் பிக்கல் பிடுங்கல் எழும்போதெல்லம் தமிழர்களோடு சேர்ந்து திருவள்ளுவரும் அடிவாங்கிக் கொண்டு இருந்தார்.





அந்தா இந்தா என ஒரு வழியாக திருவள்ளுவருக்கு விடுதலை கிட்டத்தட்ட கைக்கு எட்டும் நிலையில் ஆகஸ்ட் 9ம் தேதி தமிழக முதல்வர் பெங்களூரில் திருவள்ளுவர் தரிசனத்தைத் துவக்கிவைக்க, ஆகஸ்ட் 13ம் தேதி சென்னையில் கர்நாடக முதல்வர் முன்னிலையில் கன்னட அறிஞர் சர்வக்ஞரின் சிலை திறக்கப்படுகிறது.




பெங்களூரு தமிழ்ச் சங்கத்தின் தலைவர் மீனாட்சி சுந்தரத்துக்கு வார்த்தைகளில் அத்தனை மகிழ்ச்சி... நெகிழ்ச்சி. கிட்டத்தட்ட 18 ஆண்டுகால கனவு நிறைவேற இருக்கிறது. ஒரு வாரத்தில் சிலை செய்யுங்கள், உடனே திறப்பு விழா நடத்துவோம்! என்று 18 ஆண்டுகளுக்கு முன் பங்காரப்பா கூறியதும் தற்காலிக ஏற்பாடாக ஃபைபரில் திருவள்ளுவர் சிலை செய்தோம். அதுதான் இத்தனை ஆண்டுகளாக கோணிக்குள் அடைந்து கிடந்தது. இப்போது திறப்பு விழா காண இருப்பது 300 கிலோ எடையும் 5 அடி உயரமும் உள்ள வெண்கலச் சிலை. பிரபல சிற்பி மணி நாகப்பா வடித்த சிலைஅது என்றார்.




எல்லாம் சரி... யார் அந்த அறிஞர் சாவக்ஞர்! பெங்களூரு செயின்ட் ஜோசப் கல்லூரியின் கன்னடத் துறை பேராசிரியர் டாக்டர் மேத்யூ சொல்கிறார்.... ""திராவிட மொழிகளின் மும்மூர்த்திகள் என திருவள்ளுவர் (தமிழ்) வேமண்ணா (தெலுங்கு). சர்வக்ஞர் (கன்னடம்) ஆகியோரைக் குறிப்பிடுவார்கள். சர்வக்ஞர் கி;பி.16ம் நூற்றாண்�ட் சேர்ந்தவர். இவர் எழுதிய நூலின் பெயர், "சர்வக்ஞர் உரைப்பா' தந்தை பசவரசன், தாய் மாலி. சர்வக்ஞர் என்ற சொல்லுக்கு அனைத்தும் அறிந்தவர் என்று பொருள். உலகம் எல்லாருக்கும் பொதுவானது. யாரும் எதற்காகவும் சொந்தம் கொண்டாட முடியாது என்ற கருத்தையே வலியுறுத்துகின்றன சர்வக்ஞரின் படைப்புகள்! என்கிறார் மேத்யூ. இதே அணுகுமுறையில் காவிரி, ஒகேனக்கல் பிரச்னைகளையும் தீர்த்தால் வள்ளுவரும் சர்வக்ஞரும் வாயாற வாழ்த்துவார்கள்!


நன்றி : தினமலர்.com

No comments:

Post a Comment